Friday, March 8, 2013

தமிழர்களும் செவ்விந்தியர்களும் !

தமிழர்களும் செவ்விந்தியர்களும் (Mayans & Incas)
நன்றி: மகேந்திரன் ஆறுமுகம்.
இன்று உலகமே ‘மாயன்’ (Mayan) என்கிற சொல்லை அறிந்திருக்கிறது. மாயன் நாட்காட்டியை வைத்து உலகம் முழுவதும் இன்று பரபரப்பு கிளப்பப்படுகிறது. உலகம் அழிந்து விடலாம் என்கிற புனைவுகளும் தொலைக்காட்சித் தொடர்களால் முன்னெடுக்கப்படுகின்றன. மாயன்கள் யார் என்று தெரியாதவர்கள் கூட மாயன் என்கிற பெயரை ஒலிக்கிறார்கள்.
ஓம்லெக்கு (Omlec), ஆசுதேக்கு (Aztec), மாயன் (Mayan), இன்கா (Inca) ஆகியவை வட அமெரிக்க, தென் அமெரிக்கக் கண்டங்களில் வாழ்ந்த மக்களுடைய நாகரிகங்களின் பெயர்கள். வெள்ளையர்கள் இவர்களைச் ‘செவ்விந்தியர்கள்’ என்று பொதுப்பட அழைத்தார்கள். அவர்கள் அப்படி அழைத்ததற்கு வரலாற்றுப் பின்னணி உண்டு.
கி.பி 14, 15ஆம் நூற்றாண்டுகளில் ஐரோப்பியர்கள் இந்தியாவிற்கு வரக் கடல் வழியைத் தேடிக் கொண்டிருந்தார்கள். அந்தக் காலக்கட்டத்தில், அட்லாண்டிக்குப் பெருங்கடலைக் குறுக்காகக் கடந்து இந்தியாவிற்கு வந்து விடலாம் என்று கொலம்பசு நம்பினார்.
அதன்படியே அட்லாண்டிக்கைக் கடக்கவும் செய்தார். ஆனால் அவர் போய்ச் சேர்ந்த கண்டம் அமெரிக்கா. ஆனால் கொலம்பசு தாம் வந்து இறங்கிய நாடு இந்தியா என்றே நம்பினார். அமெரிக்கக் கண்டத்தைச் சேர்ந்த மக்கள், இனக்குழு வழக்கப்படித் தங்கள் உடம்பில் சிவப்பு நிறம் பூசிக்கொள்வது வழக்கம்.
இதைப் பார்த்த ஐரோப்பியர்கள், உடம்பில் சிவப்பு நிறம் பூசிய அந்த மக்களையும், தாங்கள் கண்டுபிடித்தது இந்தியா என்கிற நம்பிக்கையையும் ஒன்றாக்கி அந்த மக்களைச் செவ்விந்தியர்கள் (Red Indians) என்று அழைக்கத் தொடங்கினார்கள்.
இந்தச் செவ்விந்தியர்கள் எப்படி இரு அமெரிக்கக் கண்டங்களிலும் (கிரீன்லாந்து, ஐசுலாந்து, கனடா உட்பட) குடியேறினார்கள் என்பது இன்று வரை அவிழ்க்கப்படாத புதிர் முடிச்சாக இருக்கிறது.
ஆனால் ஒன்றை மட்டும் வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். அதுதான் செவ்விந்தியர்களுக்கும், தமிழர்களுக்கும் தொடர்பு உண்டு என்பது! இது, படிப்பதற்கு ஏதோ இட்டுக் கட்டிய கதை, தமிழர்களுக்கு வலிந்து பெருமை தேடுகிற முயற்சி, உலகத்தில் உள்ளவர்களையெல்லாம் தமிழர்களோடு தொடர்புப்படுத்துகிற மோசடி என்பது போலத் தோன்றலாம்; ஆனால் உண்மை இதுதான்!
நல்லவேளை! இந்த உண்மையைக் கண்டுபிடித்தவர்கள் வெளிநாட்டு வரலாற்று ஆராய்ச்சியாளர்கள். அதனால் நம்மவர்கள் இதை நம்பத் துணிவார்கள். இதுவே, தமிழ் வரலாற்று ஆராய்ச்சியாளர் ஒருவர் இந்த உண்மையைக் கண்டுபிடித்திருந்தால் அவரைப் பித்துக்குளி என முத்திரை குத்தி மூலையில் தள்ளி இருப்போம். தன் இனத்து அறிஞனை மதிக்காத எந்த இனமும் உருப்பட்டதாக வரலாறு கிடையாது. இதற்குக் கண்கூடான எடுத்துக்காட்டு தமிழனே!
‘மெக்சிகோ, பெரு தேடல்’ (The Conquest of Mexico and Peru) என்கிற வரலாற்று நூலை எழுதிய வில்லியம் பெரசுக்கோடு (William H. Prescott) என்பவரே முதன் முதலில் செவ்விந்தியர் – தமிழர் தொடர்பைப் பற்றிப் பேசியவர். ஐரோப்பியர்கள் எப்படிச் செவ்விந்தியர்களை மெக்சிகோ, பெரு ஆகிய இரு நாடுகளிலிருந்தும் முற்றிலும் ஒழித்துக் கட்டினார்கள் என்பதை விலாவாரியாக இந்த நூல் விளக்குகிறது.
இந்த நூலின் தொடக்கத்தில் செவ்விந்தியர்களின் பூர்விகம் குறித்துப் பேசும் வில்லியம், தமிழர் தொடர்பை அடித்துக் கூறுகிறார். வரலாற்று ஆராய்ச்சியாளர் இல்லையென்றாலும் சே குவேராவும் தன்னுடைய தென் அமெரிக்கப் பயணக் குறிப்புகளில் இதைப் பற்றி எழுதியிருக்கிறார்.
‘இன்காக்கள் (Incas) தென் அமெரிக்கச் சோழர்கள்’ என்கிற ஆராய்ச்சி நூல் ஒன்று தமிழிலும் இருக்கிறது. பத்து ஆண்டுகளுக்கு முன்னால் நூலகத்தில், யாரும் திரும்பிப் பார்க்கக் கூடச் சிந்திக்கும் நூல் அடுக்கு ஒன்றில், தூசி தும்பட்டைகளுக்கு இடையிலிருந்து எடுத்து இந்த நூலை நான் படித்திருக்கிறேன்.
இந்த நூலை எழுதிய ஆராய்ச்சியாளரின் பெயரை நான் மறந்துவிட்டதன் காரணமாக என்னால் அது குறித்த தகவலைத் தர இயலவில்லை. இது மிகுந்த வருத்தமளிக்கக் கூடிய ஒன்று! இந்தக் கட்டுரை எழுதும் பொருட்டு இந்த அருமையான நூலை நூலகத்தில் எவ்வளவோ முயன்று தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை! இந்த நூலுக்கு மறுபதிப்பு இல்லை என்பது அடுத்த வேதனை! தமிழ் அறிஞர்களின் ஆராய்ச்சி அறிவு இப்படித்தான் கண்டுகொள்ள ஆளில்லாமல் காணாமல் போகிறது.
செவ்விந்தியர்களின் பண்பாட்டுக் கூறுகள் மிகத் தெளிவாகத் தமிழர்களின் பண்பாட்டுக் கூறுகளை உள்ளடக்கி இருக்கின்றன. தமிழர்களின் வானியல், செவ்விந்தியர்களின் வானியலோடு ஒத்துப் போகிறது.
செவ்விந்தியர்களின் வானியல் நுட்பத்தை ஆராய்ந்த வரலாற்று ஆராய்ச்சியாளர்கள், பல்லாயிரம் ஆண்டுகள் பட்டறிவின் (அனுபவத்தின்) மூலமாகவே இத்தகைய நுட்பங்களைப் பெற முடியும் எனவும், செவ்விந்தியர்களுக்கு இஃது ஒரே இரவில் கைவந்திருக்க இயலாது எனவும் கணிக்கிறார்கள். காரணம், செவ்விந்தியர்கள் ஓரிடத்தில் நிலைத்து வாழ்பவர்கள் இல்லை.
அவர்களுடையது நாடோடிப் பண்பாடு, நாடோடி இனம் வானியலில் தேர்ச்சி பெறுவது இயலாது. தமிழர்களுடனான தொடர்பே இவர்கள் வானியலில் தேர்ச்சி பெறுவதற்கு உதவியிருக்கும் என்று கருதுகிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். மெசபதோமியா, எகிப்து நாகரிகங்களின் தொடர்புகள் செவ்விந்தியர்களிடம் இல்லை.
செவ்விந்தியர்கள், ஏறக்குறைய 3000 ஆண்டுகளாக அமெரிக்கக் கண்டங்களில் வாழ்ந்தாலும் அவர்களுடைய வாழ்க்கை, நிலையான வேளாண்முறை சார்ந்த நிலவுடைமைப் பண்பாடு கொண்டதாக இல்லை.
காடு சார்ந்த பொருட்களும், கால் நடைகளுமே அவர்களுடைய சொத்துகள். தென் அமெரிக்காவில் காடுகளிலும், வட அமெரிக்காவில் இடம் விட்டு இடம் நகரும் வகையிலுமே அவர்கள் தங்களுடைய வாழ்க்கையை அமைத்துக் கொண்டிருந்தார்கள்.
அமெரிக்கா போன்ற இயற்கை வளம் நிறைந்த நாட்டில், செவ்விந்தியர்கள் நிலையான வேளாண் சமூகத்தை ஏற்படுத்தாதது வியப்புக்குரியது! மெல் கிப்சனின் (Mel Gibson) அபோகலிப்டா (Apocalypto) படம் தென் அமெரிக்கச் செவ்விந்தியர்களின் சமுதாய அமைப்பை மிகத் துல்லியமாகக் காட்சிப்படுத்தியிருந்தது.
ஆலிவுட்டின் (Hollywood) இனவெறி பிடித்த கௌ பாய்ப் (Cowboy) படங்களில், வெள்ளையர்களுக்கும் செவ்விந்தியர்களுக்கும் இடையிலான சண்டைக் காட்சிகளில் வட அமெரிக்கச் செவ்விந்தியர்களின் சமுதாய அமைப்பைத் தெரிந்து கொள்ளலாம்.
ஐரோப்பியர்களுக்கு, அமெரிக்கா என ஒரு கண்டம் இருப்பதே கி.பி 12, 13ஆம் நூற்றாண்டுகளுக்குப் பிறகுதான் தெரிய வந்தது. ஆனால் 2500 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்களுக்கு அமெரிக்கக் கண்டத்தோடு தொடர்பு இருந்திருக்கிறது! இது கற்பனைக் கதை இல்லை;
இதற்கு வலுவான சான்று உண்டு! தென் பசிபிக் பெருங்கடலில் (Pacific Ocean), ஆத்திரேலியக் (Australia) கடல் பகுதியில் கடல் அகழ்வாராய்ச்சி (Ocean Archeology) மேற்கொண்டபொழுது மிகப் பெரிய சரக்குக் கப்பல் ஒன்றைக் கண்டுபிடித்தார்கள்.
முழுவதும் மரத்தால் கட்டப்பட்டிருந்த இந்தக் கப்பல் வணிகப் பொருட்களுடன் மூழ்கியிருந்தது. கரிம ஆய்வு (Carbon-Dating) முறையின்படி இந்தக் கப்பலின் வயது இன்றிலிருந்து 2500 ஆண்டுகளுக்கும் மேல் எனத் தெரிந்திருக்கிறது. தரவுகளை ஆராய்ந்த ஆராய்ச்சியாளர்கள், தமிழர்கள் வணிகத்திற்குப் பயன்படுத்திய கப்பல்களில் ஒன்றுதான் இஃது என்றும், ஆத்திரேலியக் கண்டத்தைத் தாண்டி அமெரிக்கா செல்லும் வழியில் பசிபிக் பெருங்கடலில் முழுகியிருக்கிறது என்றும் முடிவிற்கு வந்தார்கள்.
ஆராய்ச்சியாளர்கள் கண்ணை மூடிக்கொண்டு இந்த முடிவுக்கு வந்துவிடவில்லை. முதலில் இந்தக் கப்பல் எந்த மரத்தால் கட்டப்பட்டது என்று ஆராய்ந்தபோது தேக்கு மரத்தால் ஆனது என்று தெரிந்திருக்கிறது.
தேக்கு, தென்னிந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் மட்டுமே கிடைக்க கூடியது. அது மட்டுமில்லாமல், 3000 ஆண்டுகளுக்கு முன்னால் கடல்களில் மிகப் பெரிய கப்பல்களை வைத்து வணிகம் செய்த நாகரிகங்கள் இரண்டே இரண்டுதான். ஒன்று தமிழர்களுடைய நாகரிகம் மற்றது எகிப்திய நாகரிகம்! மூழ்கிய அந்தக் கப்பலின் கட்டுமான அமைப்பு எகிப்தியர்களின் சரக்குக் கப்பல்களோடு பொருந்திப் போகவில்லை. மேலும், எகிப்தியர்கள் கரையோரமாகவே பயணித்துச் செல்லக் கூடியவர்கள்.
அவர்களுக்கு நடுக்கடலில் கப்பல் செலுத்தத் தெரியாது. அதன் காரணமாக, அவர்களுடைய கப்பல்களின் கட்டுமானமும் கரையோரமாகப் பயணிக்க ஏற்ற வகையில்தான் இருக்கும். கண்டுபிடிக்கப்பட்ட கப்பலோ மிகப் பெரியதாக, நிறைய சரக்குகளைக் கையாளக் கூடியதாக இருந்ததோடு, நடுக்கடலில் பயணம் செய்வதற்கு ஏற்றபடியும் கட்டப்பட்டிருந்தது.
இந்தக் கப்பலில் இருந்த சரக்குகளும் தென்னிந்தியாவில் மட்டுமே கிடைக்ககூடியவையாக இருந்தன. தமிழ் இலக்கியங்கள் மட்டுமே கடலில் பயணிக்கும் கலங்களுக்குப் பயன்பாட்டின் அடிப்படையில் அமைந்த பெயர்களைப் பற்றிக் கூறுகிறது. இவை மூலம், தமிழர்களின் கடலோடும் அறிவை ஆராய்ந்த ஆராய்ச்சியாளர்கள், இது தமிழர்களுடைய வணிகக் கப்பல்தான் என உறுதி செய்திருக்கிறார்கள்.
ஆக, வெள்ளையர்கள் நாடோடிகளாகச் சுற்றித் திரிந்த காலத்திலேயே தமிழன் ஆத்திரேலியக் கண்டத்தையும், அமெரிக்கக் கண்டத்தையும் கண்டு அறிந்து வைத்திருந்திருக்கிறான்! இந்தக் கண்டங்களோடு வணிகத் தொடர்புகள் அவனுக்கு இருந்திருக்கின்றன. நம்முடைய சாபக்கேடு இவற்றைப் பற்றிய முறையான வரலாற்று ஆவணங்கள் இல்லாமை. 3000 ஆண்டுகளுக்கு முன்பே நடுக்கடலில் பயணிக்கத் தெரிந்த தமிழன், தன்னுடைய சிறப்புகள் பற்றிப் பதிந்து வைக்கத் தவறியது கேடுகாலமே!
உலக நாகரிகங்களுடனான நம்முடைய தொடர்புகளைப் பற்றிப் பேச இன்று ஆளில்லை! அங்கொன்றும் இங்கொன்றுமாக நம்முடைய சிறப்புகள் குறித்து வரலாற்று ஆதாரங்கள் கிடைத்தாலும் வெகு மக்களிடம் அதைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தத் தமிழர்கள் தவறிவிடுகிறார்கள்.
என்பதை விட அக்கறை இல்லாமல் இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை! ஆயிரம் ஆண்டுகளாகத் தொடரும் இந்த அக்கறையின்மைதான் நாடு இழப்புகளிலும், இனப் படுகொலைப் பாதிப்புகளிலும் தமிழனைக் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது!
நன்றி: மகேந்திரன் ஆறுமுகம்.